3 கூரை வீடுகள் எரிந்து சாம்பல்
நன்னிலம் அருகே 3 கூரை வீடுகள் எரிந்து சாம்பலானது
நன்னிலம்:
நன்னிலம் அருகே வண்டாம்பாளை படுகை தெருவை சேர்ந்தவர்கள் ஜெயபால், கோபி, கலா. கூலி தொழிலாளர்களான இவர்கள் அதேபகுதியில் தனித்தனி கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மதியம் திடீரென்று கலா வீட்டில் தீ பிடித்துள்ளது. இந்த தீயானது அருகில் உள்ள கோபி, ஜெயபால் ஆகியோரது கூரைவீடுகளுக்கும் பரவியது. இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் நன்னிலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இதில் அந்த வீடுகளில் இருந்த ஏராளமான பொருட்கள் சேதம் அடைந்தன. இது குறித்து நன்னிலம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்தது தெரியவந்தது. தகவல் அறிந்த நன்னிலம் தாசில்தார் ஜெகதீசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூன்று குடும்பத்தினருக்கும் தலா ரூ.5000 மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்.