ஒரே கிராமத்தை சேர்ந்த 3 பள்ளி மாணவர்கள் மாயம்
உளுந்தூர்பேட்டை அருகே ஒரே கிராமத்தை சேர்ந்த 3 பள்ளி மாணவர்கள் மாயம்
உளுந்தூர்பேட்டை
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் யாகூப்(13), அமீர்அலி(13), கையீப்(13). இவர்கள் 3 பேரும் வெவ்வேறு பள்ளிகளில் 8-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் 3 மாணவர்களும் நேற்று காலை 6 மணிக்கு வீட்டில் இருந்து தொழுகைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவர்களை தேடி பள்ளி வாசலுக்கு சென்றனர். ஆனால் அங்கு அவர்களை காணவில்லை. இதனால் அக்கம் பக்கத்து இடங்களில் மாணவர்களை அவர்களின் பெற்றோர் தேடி அலைந்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர்களை காணாததால் இதுபற்றி திருநாவலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் களமருதூர் கிராமத்துக்கு விரைந்து வந்து மாணவர்களின் பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது 3 மாணவர்களும் உளுந்தூர்பேட்டைக்கு செல்லக்கூடிய பஸ்சில் ஏறி வெளியூருக்கு சென்றது தெரியவந்துள்ளது. ஆனால் அவர்கள் எதற்காக வெளியூா் சென்றார்கள்? என்ற விவரம் தொியவில்லை. இதைத் தொடர்ந்து சென்னை, சேலம், திருச்சி மாவட்ட போலீசாரின் உதவியுடன் மாயமான 3 மாணவர்களையும் தேடும் பணியில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.