மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து 3 மாணவர்கள் படுகாயம்
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, ஆவினங்குடியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் ஹரிஷ் (வயது 20). தொழுதூர் அருகே பாளையத்தை சேர்ந்த கருப்பையாவின் மகன் பூபதி. பெண்ணாடத்தை சேர்ந்தவர் சந்துரு. நண்பர்களான இவர்கள் 3 பேரும் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மங்களமேடு பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர். இதில் ஹரிஷ், பூபதி, சந்துரு ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.