சாராயம் கடத்தல் 3 வாலிபர்கள் கைது
சின்னசேலம் அருகே சாராயம் கடத்தல் 3 வாலிபர்கள் கைது மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
சின்னசேலம்
கல்வராயன்மலையில் இருந்து மலையடிவாரப்பகுதி மட்டுமின்றி சேலம், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கும் மர்ம நபர்கள் சாராயத்தை கடத்தி சென்று விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனசேகர் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் இருந்தனர்.
அப்போது கல்வராயன்மலை அடிவாரத்தில் இருந்து தகரை செல்லும் சாலையில் உள்ள ஊத்தங்கரைக்காடு பகுதியில் 3 மர்ம நபர்கள் தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் சாக்குமூட்டைகளுடன் வந்து கொண்டிருந்தனர். இதைப்பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை வழிமறித்து சாக்குமூட்டைகளை பிரித்து பார்த்தபோது உள்ளே லாரி டியூப்களில் சாராயம் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கல்வராயன்மலை வெள்ளிமலையை அடுத்த நாராயணபட்டி, வடக்கு தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மகன் தீர்த்தன்(வயது 35), சின்னதிருப்பதி, நடுத்தெரு சந்திரன் மகன் வெங்கடேசன்(30), அன்னதானம் மகன் ஜெயராமன்(38) என்பதும் சாராயத்தை கடத்தி வந்தபோது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்களுடன் 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல்செய்தனர்.