போதை ஊசி, மருந்து விற்ற 3 வாலிபர்கள் கைது
திண்டிவனத்தில் போதை ஊசி, மருந்து விற்ற 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
திண்டிவனம்:
திண்டிவனம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது கிடங்கல்-2 வண்ணான் குளக்கரை அருகில் மோட்டார் சைக்கிளுடன் 3 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் 3 பேரும் ஓடினர். உடனே போலீசார் துரத்திச் சென்று 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வட ஆலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த இளந்திரையன்(வயது 20), முத்துராமன்(22), திண்டிவனம் கிடங்கல்-2 பகுதியை சேர்ந்த அப்பு என்கிற ஆகாஷ்(21) ஆகியோர் ஆன்லைன் மூலம் போதை ஊசி, மருந்து வாங்கி, திண்டிவனத்தில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், கூலித்தொழில் செய்து வந்த இளந்திரையனுக்கு போதிய வருவாய் கிடைக்கவில்லை. எனவே சாராயம், கஞ்சா, ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்துள்ளார். மேலும் ஆன்லைன் மூலம் போதை ஊசி, மாத்திரைகளை வாங்கி தனது நண்பர்களான ஆகாஷ், முத்துராமன் ஆகியோருடன் விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது.
இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.70 ஆயிரம் மதிப்பிலான போதை ஊசி, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.