குப்பைகளை கொட்ட வந்த 3 டெம்போக்களை சிறைபிடித்த பொதுமக்கள்
தக்கலை அருகே குப்பைகளை கொட்ட வந்த 3 டெம்போக்களை பொதுமக்கள் சிறை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
தக்கலை:
தக்கலை அருகே குப்பைகளை கொட்ட வந்த 3 டெம்போக்களை பொதுமக்கள் சிறை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இரவு நேரத்தில் கொட்டப்படும் குப்பைகள்
தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை, வெள்ளிகோடு, பள்ளியாடி போன்ற இடங்களில் குடியிருப்புகள் இல்லாத ஒதுக்கு புறமான பகுதிகளில் இரவு நேரத்தில் குப்பைகள், பிளாஸ்டிக்கழிவுகளை கொட்டி செல்கிறார்கள். அதாவது, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் ஒப்பந்த தொழிலாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்லவேண்டும். ஆனால் சில நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் குப்பை கிடங்கில் போதிய இடம் இல்லாததால் தொழிலாளர்கள் கழிவு பொருட்களை வாகனங்கள் மூலம் இரவு நேரங்களில் ஒதுக்கு புறமான இடங்களில் கெட்டி விட்டு செல்கிறார்கள்.
இவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் காற்றில் பறந்து குடியிருப்பு பகுதிகளில் வருகிறது. மேலும் நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
டெம்போக்கள் சிறை பிடிப்பு
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பள்ளியாடி பகுதியில் குப்பைகளை கொட்ட வந்த 2 டெம்போக்களை வாள்வச்சகோஷ்டம் பேரூராட்சி தலைவர் தலைமையில் பொதுமக்கள் சிறைபிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் வெள்ளிகோடு பகுதியில் கொட்டுவதற்காக 3 டெம்போக்கள் குப்பைகளுடன் வந்தன. அவற்றை பார்த்த பொதுமக்கள் அங்கு திரண்டு டெம்போக்களை சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பொதுமக்கள் அந்த டெம்போக்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த வாகனங்களை போலீஸ் நிலையம் கொண்டுவரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஒரு உள்ளாட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை இன்னொரு உள்ளாட்சி பகுதியில் கொட்டுவதால் சட்டம் ஒழுக்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.