காற்றாலைகளில் மின்உற்பத்தி 3 மடங்கு அதிகரிப்பு


காற்றாலைகளில் மின்உற்பத்தி 3 மடங்கு அதிகரிப்பு
x

குமரியில் பலத்த காற்று வீச தொடங்கியுள்ளதால் காற்றாலைகளில் மின் உற்பத்தி 3 மடங்கு அதிகரித்துள்ளது.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

குமரியில் பலத்த காற்று வீச தொடங்கியுள்ளதால் காற்றாலைகளில் மின் உற்பத்தி 3 மடங்கு அதிகரித்துள்ளது.

காற்றாலைகளில் மின் உற்பத்தி

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, முப்பந்தல், குமாரபுரம் மற்றும் பழவூர், ராதாபுரம், நக்கநேரி, கோலியான்குளம், ஆவரைகுளம் போன்ற இடங்களில் இருந்து சுமார் 30 வருடங்களுக்கு மேலாக காற்றாலை மூலம் மின்உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த பகுதிகளில் மொத்தம் 7 ஆயிரத்திற்கும் மேலான காற்றாலைகள் உள்ளன. இதில் பல்வேறு வகையான திறன் கொண்ட காற்றாலைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதிகபட்சமாக 1,650 கிலோவாட் கொண்ட காற்றாலைகள் இருக்கிறது. அதேபோல் 250, 500, 750, 1,250 கிலோவாட் திறன் கொண்ட காற்றாலைகளும் உள்ளது.

அதிகரிப்பு

காற்றாலைகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் அதிகமாக மின்உற்பத்தி செய்யப்படும். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மின்உற்பத்தி மிக குறைவாக இருக்கும். ஏனெனில் அந்த சமயத்தில் காற்று பலமாக வீசுவது கிடையாது.

ஜூன் மாதமான தற்போது காற்று நன்றாக வீச தொடங்கியுள்ளதால் மின் உற்பத்தி அதிகமாக உள்ளது.

3 மடங்கு அதிகம்

இதுகுறித்து தனியார் காற்றாலை மேலாளர் ஆர்.எஸ்.பிள்ளை கூறியதாவது:-

கடந்த சில வாரத்திற்கு முன்பு 1 வினாடிக்கு 15 முதல் 18 மீட்டர் வரை இருந்த காற்றின் வேகம் 3 நாட்களாக 20 முதல் 23 மீட்டர் வரை வீசுகிறது. இதனால் மின் உற்பத்தி பலமடங்கு அதிகரித்து உள்ளது.

அதாவது 250 கிலோவாட் திறன் கொண்ட காற்றாலை தற்போது தினமும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் யூனிட் வரையும், 500 கிலோவாட் திறன் கொண்ட காற்றாலையில் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் யூனிட்டும், 750 திறன் கொண்ட காற்றாலை 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் யூனிட்டும், 1,650 திறன் கொண்ட காற்றாலை 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் யூனிட் மின்சாரத்தையும் உற்பத்தி செய்கிறது. இதை கணக்கிடும் போது தற்போது 3 மடங்கு மின் உற்பத்தி அதிகமாக இருக்கிறது. இனிவரும் நாட்களில் மின்உற்பத்தி அதிகரிப்பது காற்று வீசுவதை பொருத்து தான் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story