மர்ம கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு
மார்த்தாண்டம் அருகே சத்திரபதி வீரசிவாஜி சிலையை சேதப்படுத்திய மர்ம ஆசாமிகளை பிடிக்க 3 தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே சத்திரபதி வீரசிவாஜி சிலையை சேதப்படுத்திய மர்ம ஆசாமிகளை பிடிக்க 3 தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
சத்ரபதி வீரசிவாஜி சிலை சேதம்
மார்த்தாண்டம் அருகே உள்ள மேல்புறம் வட்டவிளையில் தோட்டத்துமடம் நவநீத கிருஷ்ணன் கோவில் உள்ளது. அதன் அருகில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மராட்டிய மன்னர் சத்ரபதி வீரசிவாஜியின் 9 அடி உயர சிலை நிறுவப்பட்டது.
கடந்த 8-ந்தேதி நள்ளிரவு மர்ம கும்பல் இந்த சிலையின் தலையை சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிலையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், அந்த பகுதியில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
3 தனிப்படை அமைப்பு
இதுதொடர்பாக கோவில் தலைவர் நடராஜன் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே தீவிர விசாரணை நடத்தி மர்ம கும்பலை கைது செய்ய வேண்டும் என்று இந்து அமைப்பினர் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மர்ம கும்பலை பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 3 தனிப்படையை போலீசார் களத்தில் இறக்கி உள்ளனர். அவர்கள் பல கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவையும் போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால், கண்காணிப்பு கேமராக்கள் இயங்காததால் சிலையை சேதப்படுத்திய மர்ம கும்பலை அடையாளம் காண முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி மர்ம நபர்களை ேதடி வருகிறார்கள்.