வேப்பூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் கிணற்றில் குதித்து தற்கொலை
வேப்பூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
சிறுபாக்கம்,
காதல்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள மலையனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுருநாதன். இவரும், அதே பகுதியை சேர்ந்த சுமதி என்பவரும் காதலித்து கடந்த 2001-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு சுமதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து 2 பெண் குழந்தைகளையும், அவரது உறவினர் வீட்டில் விட்டுவிட்டு சிவகுருநாதன் சென்னை போரூர் அடுத்த ஆலம்பாக்கத்திற்கு சென்றார். அங்கு வாடகை வீட்டில் தங்கி இருந்தபடி கூலி வேலை செய்து வந்தார்.
மற்றொரு பெண்ணுடன் பழக்கம்
அப்போது சிவகுருநாதனுக்கு ஆலம்பாக்கத்தை சேர்ந்த மிஸ்பாசாந்தி(வயது 35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களிடையே காதலாக மலர்ந்தது. இதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன், மனைவிபோல் வாழ்ந்து வந்தனர்.
இதன் விளைவாக மிஸ்பாசாந்திக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பெயர் அருள் ஹெலன் கிரேஸ்(6).
கருத்து வேறுபாடு
இந்த நிலையில் சிவகுருநாதனுக்கும், மிஸ்பாசாந்திக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2019-ம் ஆண்டு சிவகுருநாதன் தனது சொந்த ஊரான மலையனூருக்கு வந்தார். பின்னர் அவர், அங்குள்ள ஒரு பர்னிச்சர் கடையில் வேலை செய்து வருகிறார். மிஸ்பா சாந்தி, தனது தாய் தேபோரால் கல்யாணி(60) மற்றும் மகள் அருள்ஹெலன் கிரேசுடன் ஆலம்பாக்கத்தில் வசித்து வந்தார். இவர்கள் 3 பேரும் அவ்வப்போது மலையனூருக்கு வந்து சிவகுருநாதனை பார்த்துவிட்டு மீண்டும் சென்னைக்கு சென்று விடுவார்கள்.
3 பேர் மாயம்
அந்த வகையில் சிவகுருநாதனை பார்ப்பதற்காக 3 பேரும் கடந்த 27-ந் தேதி சென்னையில் இருந்து மலையனூருக்கு வந்தனர். அப்போது அவர்கள், இனிமேல் இங்கேயே தங்க போவதாகவும், வாடகைக்கு வீடு பார்க்குமாறும் சிவகுருநாதனிடம் கூறினர். அதன்படி உடனடியாக சிவகுருநாதன், வாடகைக்கு வீடு பார்த்தார். அதில் அவர்கள் 3 நாட்கள் தங்கினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உணவு வாங்குவதற்காக சிவகுருநாதன் ஓட்டலுக்கு சென்றார். அங்கு தேவையான உணவு வாங்கிக் கொண்டு வீட்டுக்கு சென்றார். ஆனால் வீட்டில் இருந்த மிஸ்பா சாந்தி உள்ளிட்ட 3 பேரையும் காணவில்லை. இதனால் பதறிபோன அவர், இரவு முழுவதும் தேடிப்பார்த்தும் அவர்கள் கிடைக்கவில்லை.
கிணற்றில் பிணம்
இந்த நிலையில் நேற்று காலையில் மலையனூரில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் 3 பேரும் பிணமாக மிதந்தனர். இதை அங்கு வேலைக்கு சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து கிராம மக்களுக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.
இது பற்றி அறிந்ததும் சிவகுருநாதன், அந்த கிணற்றுக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு பிணமாக மிதந்தது, மிஸ்பா சாந்தி, தேபோரால் கல்யாணி, அருள்ஹெலன் கிரேஸ் ஆகியோர் என்பது தெரிந்ததும் அவர் கதறி அழுதார்.
தற்கொலை
இதுபற்றி தகவல் அறிந்ததும் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவியா, இன்ஸ்பெக்டர் சீனிபாபு மற்றும் சிறுபாக்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றில் பிணமாக மிதந்த 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், 3 பேரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால் அவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது பற்றிய விவரம் தெரியவில்லை.
இது தொடர்பாக சிறுபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய், மகள் உள்பட 3 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.