ஆற்று வெள்ளத்தில் சிக்கி 3 பெண்கள் பலி
மசினகுடி அருகே கோவிலுக்கு சென்று திரும்பிய போது, ஆற்று வெள்ளத்தில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மேலும் ஒரு பெண்ணை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஊட்டி,
மசினகுடி அருகே கோவிலுக்கு சென்று திரும்பிய போது, ஆற்று வெள்ளத்தில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மேலும் ஒரு பெண்ணை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
ஆணிக்கல் மாரியம்மன் கோவில்
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் சீகூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைக்கட்டி அருகே ஆணிக்கல் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் படுகர் இன மக்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். மேலும் சுற்றுவட்டார பகுதி மக்களும் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தனர்.
அந்த பகுதியில் ஓடும் கெதறல்லா ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் இந்த கோவிலுக்கு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும்.
நேற்று முன்தினம் கோவிலில் கார்த்திகை மாத சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் எப்பநாடு, கடநாடு, சின்ன குன்னூர், பேரகட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் தரைப்பாலம் வழியாக கோவிலுக்கு சென்றனர். அப்போது அந்த ஆற்றில் தண்ணீர் குறைவாக சென்றுகொண்டு இருந்தது.
திடீர் வெள்ளப்பெருக்கு
இந்தநிலையில் மாலை நேரத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் கோவிலுக்கு சென்ற பக்தர்கள், பாலத்தின் வழியே மீண்டும் ஆற்றின் மறு கரைக்கு வந்து கொண்டு இருந்தனர்.
மழை காரணமாக ஆற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தரைப்பாலம் வழியாக வந்தவர்கள் அவசர அவசரமாக மறுகரைக்கு வர முயன்றனர். அதற்குள் ஆற்று வெள்ளம் தரைப்பாலத்தை மூழ்கடித்தது.
4 பெண்கள் சிக்கினர்
இதனால் தரைப்பாலத்தில் வந்தவர்களில் பலர் மீண்டும் கோவில் இருந்த பகுதிக்கு சென்றுவிட்டனர்.
ஆனால், தரைப்பாலத்தை கடக்க முயன்ற ஜக்கலொரை, கவரட்டி பகுதியை சேர்ந்த சரோஜா (வயது 65), வாசுகி (45), விமலா (35), சுசீலா (56) ஆகிய 4 பெண்கள் ஆற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். அவர்கள் பேரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
மீட்பு பணி
இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி, ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், மசினகுடி போலீசார், சீகூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஆற்றின் கரையோரம் நின்ற மற்ற பக்தர்களையும் மீட்க முயற்சித்தனர்.
ஆனால், இரவு நேரமானதால் இருள் சூழ்ந்தது. இதனால் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இரவு 11 மணிக்கு மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டது. இதனால் வெள்ளத்தில் அடித்து சென்ற பெண்களின் உறவினர்கள் சோகத்துடன் இருந்தனர். பின்னர் பொதுமக்கள் கோவில் வளாகத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.
3 பெண்கள் உடல் மீட்பு
வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 4 பேரின் உடல்களை தேடும் பணி நேற்று காலை மீண்டும் தொடங்கியது. அப்போது சரோஜா, வாசுகி, விமலா ஆகியோரின் உடல்கள், சம்பவ இடத்தில் இருந்து சிறிது தொலைவில் புதர் ஒன்றில் சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேரின் உடல்களும் ஒன்றன் பின் ஒன்றாக மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட உடல்களை தீயணைப்பு வீரர்கள் டோலி கட்டி தூக்கி வந்தனர். பின்னர் 3 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் ஒருவரை தேடும் பணி
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சுசீலாவை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவரது கதி என்ன என்று தெரியாததால் அவரது உறவினர்கள் சோகத்துடன் அந்த பகுதியில் இருந்தனர்.
இதற்கிடையே ஆற்று வெள்ளம் காரணமாக கோவில் பகுதியில் தவித்துக்கொண்டு இருந்தவர்களை தீயணைப்புத் துறையினர் நேற்று பத்திரமாக மீட்டு வந்தனர்.
கோவிலுக்கு சென்று திரும்பிய 3 பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கி பலியான சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.