தாய், மகள் உள்பட 3 பெண்கள் பலி


தாய், மகள் உள்பட 3 பெண்கள் பலி
x

உளுந்தூர்பேட்டை அருகே 20 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் தாய், மகள் உள்பட 3 பெண்கள் பலியாகினர்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஏஜாஸ் (வயது 28). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது தாய் சமீம் (50), தங்கை அம்ரின் (22), உறவினர்கள் சுபேதா (21), நசீம் (45) ஆகியோருடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து சேலத்திற்கு காரில் உறவினர் வீட்டிற்கு சென்றார்.பின்னர், நேற்று முன்தினம் நள்ளிரவில் அவர்கள் சேலத்தில் இருந்து சென்னை நோக்கி காரில் புறப்பட்டனர். காரை ஏஜாஸ் ஓட்டிச் சென்றார்.

தறிகெட்டு ஓடிய கார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் தனியார் பால் பண்ணை அருகே வந்த போது, அந்த கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. அப்போது கண்இமைக்கும் நேரத்தில் சாலையோரம் உள்ள 20 அடி பள்ளத்தில் கார் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சமீம், அம்ரின், சுபேதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் ஏஜாஸ் மற்றும் நசீம் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

2 பேர் மீட்பு

இதை பார்த்த பாதசாரிகள் உடனே உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்செல்வம் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

இதற்கிடையே விபத்தில் பலியான 3 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story