ராணுவவீரர் உள்பட 3 பேர் படுகாயம்


ராணுவவீரர் உள்பட 3 பேர் படுகாயம்
x

அம்மையநாயக்கனூர் அருகே தாறுமாறாக ஓடிய கார் தடுப்புச்சுவரில் தொங்கி நின்ற விபத்தில், ராணுவவீரர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 24). ராணுவ வீரர். அதே ஊரை சேர்ந்தவர்கள் கருப்பு ராஜா (34), சரவணன் (வயது 20). இவர்கள் 3 பேரும் திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். காரை அசோக்குமார் ஓட்டினார்.

திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் அம்மையநாயக்கனூர் நக்கம்பட்டி மேம்பாலத்தில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. எதிர்புறம் உள்ள சாலைக்கு உருண்டு சென்ற கார், பாலத்தின் தடுப்புச்சுவர் மீது ஏறி தொங்கியபடி நின்றது.

சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது. மேலும் காரை ஓட்டிய அசோக்குமார் உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உயிருக்கு போராடிய அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அம்மையநாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.


Next Story