கோர்ட்டு வளாகத்தில் தகராறு:காவலாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை-மேட்டூர் கோர்ட்டு தீர்ப்பு


கோர்ட்டு வளாகத்தில் தகராறு:காவலாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை-மேட்டூர் கோர்ட்டு தீர்ப்பு
x

கோர்ட்டு வளாகத்தில் தகராறில் ஈடுபட்ட காவலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மேட்டூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

சேலம்

மேட்டூர்:

மேட்டூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. இந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள மேட்டூர் குற்றவியல் நீதிமன்ற எண் 2-ல் 2018-ம் ஆண்டு இரவு நேர பாதுகாவலராக பணியாற்றி வந்தவர் ராஜா. இவர் பணியில் இருந்த போது அங்குள்ள மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் இரவு நேர காவலாளியாக ராஜா முகமது என்பவர் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று மது அருந்திவிட்டு குடிபோதையில் இருந்த ராஜா முகமது, குற்றவியல் நீதிமன்ற எண்-2 பாதுகாவலராக பணியாற்றி வந்த ராஜாவிடம் தகராறு செய்து அவரை தாக்கினார். மேலும் தகாத வார்த்தைகளால் திட்டினார். இது குறித்து ராஜா மேட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மேட்டூர் போலீசார் விசாரணை நடத்தி ராஜாவை தாக்கிய ராஜா முகமது மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை மேட்டூர் குற்றவியல் கோர்ட்டு எண் 1-ல் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு பத்மப்பிரியா, காவலாளி ராஜா முகமதுவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பை அடுத்து ராஜா முகமது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ராஜா முகமது தற்போது சேலம் கோர்ட்டில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story