கஞ்சா பதுக்கிய பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
கஞ்சா பதுக்கிய பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை-மதுரை கோர்ட்டு தீர்ப்பு
மதுரை கோமதிபுரத்தை சேர்ந்த குமரையாவின் மனைவி பாக்கியம் (வயது 60). இவர் கடந்த 2016-ம் ஆண்டில் கஞ்சா பதுக்கிய இருப்பதாக போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் விசாரித்ததில், பாக்கியத்திடம் இருந்து போலீசார் 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு மதுரை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் விஜயபாண்டியன் ஆஜரானார். விசாரணை முடிவில் பாக்கியத்தின் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. இதனால் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஹரிஹரகுமார் நேற்று தீர்ப்பளித்தார். தண்டனை பெற்ற பாக்கியம், ஏற்கனவே ஒரு கஞ்சா வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்று சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.