ரூ.1,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்வாரிய ஊழியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
மின் இணைப்பை மாற்றித்தர ரூ.1,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்வாரிய ஊழியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கரூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வீடு கட்டும் பணி
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருேக உள்ள ஈசநத்தத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் புதிதாக வீடு கட்டி வந்துள்ளார். வீடு கட்டும் பணிக்காக தற்காலிகமாக மின் இணைப்பை பெற்று வீடு கட்டி முடித்தார். அந்த மின் இணைப்பை வீட்டு உபயோகத்திற்கான மின் இணைப்பாக மாற்றி தரும்படி கேட்டு விண்ணப்பத்தை ஈசநத்தத்தில் உள்ள மின்சார வாரிய உதவி பொறியாளர் சுரேஷ்குமாரிடம் கொடுத்துள்ளார்.
கைது
அந்த விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்க கேட்டபோது சுரேஷ்குமார் ரூ.ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத கார்த்திகேயன் இதுகுறித்து திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார்.
இதையடுத்து அவர்கள் அளித்த ஆலோசனையின் பேரில் கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கார்த்திகேயன் ரூ.ஆயிரத்தை சுரேஷ்குமாரிடம் கொடுத்துள்ளார். அப்போது ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவினர் சுரேஷ்குமாரை கைது செய்தனர்.
3 ஆண்டுகள் சிறை
இந்த வழக்கு கரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. இதையடுத்து விசாரணை முழுமையாக நிறைவடைந்ததையடுத்து நேற்று இந்த வழக்கில் நீதிபதி ராஜலிங்கம் தீர்ப்பு வழங்கினார்.
இந்த தீர்ப்பில் லஞ்சம் கேட்டதற்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாத சிறைத்தண்டனையும், பதவியை துஷ்பிரயோகம் செய்து, லஞ்சம் பெற்றதற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனையும் விதித்து இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.