பெண் உள்பட 3 பேருக்கு 3 ஆண்டு சிறை
நாகையில் மீனவரை கத்தியால் குத்திய வழக்கில் பெண் உள்பட 3 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
நாகையில் மீனவரை கத்தியால் குத்திய வழக்கில் பெண் உள்பட 3 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
கத்தி குத்து
நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 42). மீனவரான இவர், சொந்தமாக படகு வைத்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 10.2.2021 அன்று நாகை தோணித்துறை ரெயில்வே கேட் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து, சுப்பிரமணியனை கத்தியால் கழுத்தில் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு நீண்ட நாள் சிகிச்சைக்கு பின் சுப்பிரமணியன் வீடு திரும்பினார்.
3 பேர் கைது
இதுகுறித்த புகாரின் பேரில் நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நாகை மதகடி தெருவை சேர்ந்த பாலமுருகன் என்பவரது மனைவி சுமித்ரா (37), சுப்பிரமணியனிடம் ரூ.18 லட்சம் கடன் வாங்கியுள்ளார். கடனை திருப்பி கொடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் சுமித்ராவுக்கும், சுப்பிரமணியனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த முன்விரோதம் காரணமாக சுமித்ரா தனது உறவினரான ஆரிய நாட்டு தெருவை சேர்ந்த சிவக்குமார் (38) உதவியுடன் வேட்டைக்காரனிருப்பை சேர்ந்த சித்தன் (35) என்பவரை தொடர்பு கொண்டு சுப்பிரமணியனை தீர்த்து கட்ட திட்டம் தீட்டி உள்ளார். அதன் பேரில் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வந்த சுப்பிரமணியனை வழிமறித்து சித்தன் கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
3 ஆண்டுகள் சிறை தண்டனை
இதையடுத்து சித்தன், சிவக்குமார், சுமித்ரா ஆகிய 3 பேரையும் நாகை டவுன் போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நாகை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகா நேற்று தீர்ப்பு வழங்கினார்.
அதில் சுப்பிரமணியனை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக சித்தன், சிவக்குமார், சுமித்ரா ஆகிய 3 பேருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 12 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.