பெண்ணை வன்கொடுமை செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை; ரூ.13 ஆயிரம் அபராதம்
பெண்ணை வன்கொடுமை செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை; ரூ.13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் லூயிஸ் நகரில் சக்தி மகளிர் இல்லம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டேவிட்ராஜ் (வயது 58) என்பவரின் மனைவி எஸ்தர் ஜோஸ்பின், தனது கணவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக தங்கி இருந்தார். இதே இல்லத்தில் தான் அவருடைய சகோதரி ஆரோக்கிய மேரி பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று தனது மனைவியை அழைத்துவர டேவிட்ராஜ் சக்தி மகளிர் இல்லத்துக்கு சென்றார். அப்போது, அவருடைய மனைவி கணவருடன் செல்ல மறுப்பு தெரிவிக்கவே, கோபத்தில், நாற்காலியில் இருந்த ஆரோக்கிய மேரியை டேவிட்ராஜ் எட்டி உதைத்து மானபங்க படுத்தியதுடன், கொலைமிரட்டலும் விடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில், டேவிட்ராஜ் மீது தகாத வார்த்தைகளால் திட்டுதல், வன்முறையால் பெண்ணை மானபங்கபடுத்துதல், கொலைமிரட்டல் விடுத்தல், பெண்ணை வன்கொடுமை செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருச்சி கூடுதல் மகிளா கோர்ட்டில் நீதிபதி மணிவாசகன் முன்னிலையில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், குற்றம் சாட்டப்பட்ட டேவிட்ராஜுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் வக்கீல் விசாலாட்சி ஆஜரானார்.