ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை


ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை
x

பஸ் வாங்க தகுதி சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா கதன நகரத்தை சேர்ந்தவர் துளசிராமன் (வயது 53). இவர் திருத்தணி பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவரிடமிருந்து மினி பஸ் வாங்குவதற்காக திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

அதற்கு ரூ.30 ஆயிரத்துக்கும் குறையாமல் தகுதி (சால்வன்சி) சான்றிதழ் வாங்கி வரும்படி வட்டார போக்குவரத்து அலுவலர் கூறியதால் துளசிராமன் பள்ளிப்பட்டு தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

ஆனால் தகுதி சான்றிதழ் வழங்க அப்போதைய பள்ளிப்பட்டு தாசில்தார் திலகம் (62) லஞ்சமாக ரூ.15 ஆயிரம் கேட்டார்.

3 ஆண்டு சிறை

இதுகுறித்து காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் துளசிராமன் புகார் கொடுத்தார். பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தல்படி ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை துளசிராமன் லஞ்சமாக கொடுத்தார். அவரிடம் இருந்து அந்த பணத்தை வாங்கிய தாசில்தார் திலகத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இந்த வழக்கு திருவள்ளூர் முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் நீதிபதி வேலரஸ் தீர்ப்பு கூறினார். அதில் லஞ்சம் வாங்கிய தாசில்தார் திலகத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.


Next Story