பெண்ணிடம் நகை வழிப்பறி செய்தஇரு வாலிபர்களுக்கு 3 ஆண்டு ஜெயில்ஓட்டப்பிடாரம் கோர்ட்டில் தீர்ப்பு
பெண்ணிடம் நகை வழிப்பறி செய்தஇரு வாலிபர்களுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனைவிதித்து ஓட்டப்பிடாரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
ஓட்டப்பிடாரம்:
கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 9 பவுன் சங்கிலி வழிப்பறி செய்த 2 வாலிபர்களுக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து ஓட்டப்பிடாரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலக ஊழியர்
ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சிவஞானபுரம் கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் மனைவி செல்வராதா (வயது 59). இவர் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு நவ., 18-ந்தேதி அன்று பணிக்கு சென்று விட்டு தூத்துக்குடியில் இருந்து பஸ்ஸில் எப்போதும்வென்றானுக்கு வந்துள்ளார். தொடர்ந்து அவரை இளங்கோவன் மோட்டார் சைக்கிள் ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வீட்டுக்கு சென்று ெகாண்டிருந்தார்.
நகை வழிப்பறி
எப்போதும்வென்றான் ஏழு கண் பாலம் அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென்று செல்வராதாவின் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி சிலுவைப்பட்டியை சேர்ந்த மாரிகுமார் மகன் ஆனந்த் என்ற அசோக் (30), அதே பகுதியைச் சேர்ந்த சங்கிலிகருப்பன் விக்ரம் என்ற விக்கி (23) ஆகிய இருவரையும் எப்போதும்வென்றான் போலீசார் கைது செய்தனர்.
3 ஆண்டுகள் ஜெயில்
தொடர்ந்து இவர்கள் மீது ஓட்டப்பிடாரம் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அரசு சார்பில் வக்கீல் முருகேசன் ஆஜரானார். இவ்வழக்கை விசாரித்த ஓட்டப்பிடாரம் மாவட்ட உரிமையியல் கோர்ட்டு நீதிபதி ஜெயந்தி, குற்றம் சாட்டப்பட்ட அந்த 2 பேருக்கும் 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.