ஆடு திருடிய 3 வாலிபர்கள் கைது
மேல்மலையனூர் அருகே ஆடு திருடிய 3 வாலிபர்கள் கைது
மேல்மலையனூர்
மேல்மலையனூர் அருகே அண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்த அஞ்சலை, வினோத்குமார், சண்முகம், விஜி ஆகியோர் தங்கள் கிராமத்தில் ஆடுகள் திருடு போவதாகவும், 11 ஆடுகளை காணவில்லை என்றும் வளத்தி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் தல்லாக்குளம் சந்தையில் திருட்டு ஆடுகள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷிணி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் வளத்தி பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஜெயின் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் அண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்த குமரேசன் மகன் செந்தமிழ் செல்வன்(வயது 22) இளங்கோவன் மகன் ராமசாமி(19), அன்பழகன் மகன் அறிவுச்செல்வன்(19) என்பதும், கடந்த 3 நாட்களாக சொந்த கிராமத்தில் ஆடுகளை திருடி அதில் சிலவற்றை விற்றதையும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 6 ஆடுகள் மற்றும் ரூ.13 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.