இரும்பு குழாய்களை திருடிய 3 வாலிபர்கள் கைது
இரும்பு குழாய்களை திருடிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜெயங்கொண்டம்:
இரும்பு குழாய்கள் திருட்டு
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உள்ள சிதம்பரம் சாலையில் விஜயகுமார் என்பவர் கடை வைத்துள்ளார். மேலும் ஆழ்துளை கிணறு அமைக்கும் லாரி வைத்து, ெதாழில் செய்து வருகிறார். இதற்கான உபகரணங்களுடன் கூடிய லாரியை அந்த கடைக்குள் நிறுத்தி இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் கடையை திறந்து பார்த்தபோது, லாரியில் இருந்த இரும்பு குழாய்கள் திருட்டு போயிருந்தன. இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் விஜயகுமார் புகார் அளித்தார்.
கண்காணிப்பு கேமராவில் பதிவு
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். இதில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் அந்த கடையை திறந்து, லாரியில் இருந்த ஆழ்துளை கிணறு அமைக்க பயன்படும் 6 இரும்பு குழாய்களை திருடி, மினி லாரியில் ஏற்றிச்சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவங்களை வைத்து விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக ஜெயங்கொண்டம் கீழத்தெருவை சேர்ந்த விஜய்(வயது 28), அன்புச்செல்வன்(26), கொடியரசன்(23) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இதில் இரும்பு குழாய்களை திருடியது அவர்கள்தான் என்பது தெரியவந்தது.
3 பேர் கைது
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் மினி லாரி மற்றும் இரும்பு குழாய்களை பறிமுதல் செய்தனர்.