நகைப்பையை திருடிய 3 வாலிபர்கள் கைது


நகைப்பையை திருடிய 3 வாலிபர்கள் கைது
x

வேலூரில் 15 பவுன் அடங்கிய நகைப்பையை திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

வேலூர்

நகைப்பை திருட்டு

வேலூர் தொரப்பாடியை சேர்ந்தவர் லோகேஷ் (வயது 30). இவர் கடந்த 7-ந் தேதி வேலப்பாடியில் உள்ள வங்கியில் உறவினரின் நகைகளை அடகு வைத்து கடன் பெறுவதற்காக சென்றார். அவர் எதிர்பார்த்த தொகை வங்கியில் இருந்து கொடுக்கப்படவில்லை. அதனால் லோகேஷ் வங்கியின் வெளியே வந்து மோட்டார் சைக்கிளில் நகைப்பையை வைத்துவிட்டு செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த 2 மர்மநபர்கள் திடீரென நகைப்பையை திருடிவிட்டு வேகமாக அங்கிருந்து சென்றனர். மர்மநபர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் போலீஸ் சூப்பிரண்டு பங்களாக அருகே சென்றபோது விபத்துக்குள்ளானது. உடனே மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு நகைப்பையுடன் தப்பியோடினார்கள். நகைப்பையில் 15 பவுன் நகைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த காட்சி அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தன.

3 தனிப்படை அமைப்பு

இதுகுறித்து வேலூர் தெற்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்மநபர்கள் குறித்து விசாரித்தனர். மர்மநபர்களின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் அந்த பதிவெண்ணை சோதனை செய்ததில் அந்த எண் காரின் பதிவெண் என்பது தெரிய வந்தது.

அதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சியாமளா, ரஜினிகாந்த், கருணாகரன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் மர்மநபர்களின் புகைப்படங்கள் மூலம் விசாரித்தனர். அதில், ஒருவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அம்மாபாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 24) என்று தெரிய வந்தது.

3 வாலிபர்கள் கைது

அதையடுத்து தனிப்படையினர் சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி, திருச்செந்தூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் 2 பேரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் இன்ஸ்பெக்டர் சியாமளா தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்களை போலீசார் மடக்கி நிறுத்தி விசாரித்தனர். அதில், 3 பேரும் நகைப்பை திருட்டு வழக்கில் தொடர்புடையவர்கள் என்று தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில், ஈஸ்வரன் மற்றும் திருச்சி அரியமங்கலம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ராஜசேகர் (23), பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (35) என்பதும், 3 பேரும் சேர்ந்து திட்டமிட்டு லோகேஷ் நகைப்பையை திருடியதும், வங்கியின் உள்ளே இருந்து லோகேஷின் நடவடிக்கைகள் குறித்து செந்தில்குமார் வெளியே இருந்த ஈஸ்வரன், ராஜசேகரிடம் செல்போனில் கூறியதும், அவர்கள் 2 பேரும் நகைப்பையை திருடி மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றதும், 3 பேர் மீதும் பல்வேறு மாவட்டங்களில் 15-க்கும் மேற்பட்ட நகை, பணம் பறிப்பு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 பவுன் நகைகள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன. 10 பவுன் நகையை செந்தில்குமார் மனைவியிடம் கொடுத்ததாகவும், அவர் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும், அவரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story