போலீஸ் வாகனம் மீது கற்களை வீசி தாக்கிய 3 வாலிபர்கள் கைது
கனியாமூர் கலவர வழக்கு: போலீஸ் வாகனம் மீது கற்களை வீசி தாக்கிய 3 வாலிபர்கள் கைது
கள்ளக்குறிச்சி
சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி மர்ம சாவை தொடர்ந்து நடைபெற்று வந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. இதில் பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடியதோடு, பள்ளி மற்றும் காவல்துறை வாகனங்களை தீ வைத்து எரித்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கலவரம் தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு இதில் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் பள்ளியில் நடைபெற்ற கலவரத்தின் போது போலீஸ் வாகனம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய சின்னசேலம் தாலுகா தெங்கியாநத்தம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் விக்னேஷ்(வயது 22), மண்மலை கிராமம் கடம்பூரான் மகன் தினேஷ்சிங்(21), கள்ளக்குறிச்சி மோரைப்பாதை ராமர் மகன் இளையராஜா(38) ஆகிய 3 பேரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.