ஆடுகளை திருட முயன்ற 3 வாலிபர்கள் கைது
மீன்சுருட்டி அருகே ஆடுகளை திருட முயன்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ஆடுகளை திருட முயற்சி
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள குலோத்தங்கநல்லூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 27). இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு தனது வீட்டில் அருள்ராஜ் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது வீட்டின் அருகே கட்டி வைத்திருந்த ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது, 3 வாலிபர்கள் ஆடுகளை திருட முயற்சி செய்தது தெரியவந்தது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அருள்ராஜ் சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதனால் பீதியடைந்த 3 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் அப்பகுதி மக்கள் அவர்கள் 3 பேரையும் மடக்கி பிடித்தனர்.
3 வாலிபர்கள் கைது
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 3 வாலிபர்களையும் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார். இதில் அவர்கள் மீன்சுருட்டி அருகே உள்ள குண்டவெளி காலனி தெருவை சேர்ந்த வேல்முருகன் மகன் பிரவீன் (19), திருமுருகன் மகன் சரவணன் என்கிற திவிஷ் ஆனந்த் (18), சத்திரம் காலனி தெருவை சேர்ந்த தங்கசாமி மகன் தமிழ்வாணன் (19) என்பது தெரியவந்தது.
இதையடுத்து 3 வாலிபர்களையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.