1¼ கிலோ கஞ்சாவுடன் 3 வாலிபர்கள் கைது
சுசீந்திரம் அருகே 1¼ கிலோ கஞ்சாவுடன் 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலகிருஷ்ணன்புதூர்:
சுசீந்திரம் அருகே 1¼ கிலோ கஞ்சாவுடன் 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தீவிர நடவடிக்கை
குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், கஞ்சா விற்பனை செய்பவர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருவதுடன் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு இதுவரை கஞ்சா வியாபாரிகள் 20 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் ஒரு சில இடங்களில் கஞ்சா புழக்கத்தில் இருந்து வருகிறது. இதை முற்றிலுமாக ஒழிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
3 பேர் கைது
இந்த நிலையில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் தலைமையிலான போலீசார் சுசீந்திரம் அருகே உள்ள புதுகிராமம் குளத்தின் அருகே ரோந்து சென்றனர். அப்போது, அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் சந்தேகப்படும் வகையில் நின்ற 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் போலீசார் சோதனை செய்தனர். சோதனையில், கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைதொடர்ந்து மொத்தம் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 3 பேரையும் சுசீந்திரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், குலசேகரன்புதூர் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த விக்னேஷ் (வயது 19), தேவகுளம் அருகே உள்ள கண்ணன்பதியை சேர்ந்த கார்த்திகேயன் (20), தேவகுளம் மாங்குளம் நடுத்தெருவை சேர்ந்த 18 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்து கஞ்சாவை எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
பரபரப்பு
பின்னர், நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் படுத்திவிட்டு விக்னேஷ், கார்த்திகேயன் ஆகிய 2 பேரையும் நாகர்கோவில் சிறையிலும், சிறுவனை பாளையங்கோட்டையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.
சுசீந்திரம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 2 நாட்களுக்கு முன் 70 கிலோ குட்கா, புகையிலை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 1¼ கிலோ கஞ்சா பிடிபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.