3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நாசரேத் அருகே மின்வாரிய ஊழியர் கொலைவழக்கில் கைதான 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நாசரேத் அருகே மின்வாரிய ஊழியரை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 வாலிபர்கள் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
மின்வாரிய ஊழியர் கொலை
நாசரேத் அருகே உள்ள வாழையடி - வைத்தியலிங்கபுரம் சாலையில் உள்ள நாசரேத் மின் பகிர்மான அலுவலகத்தில் பாளையங்கோட்டை கே.டி.சி நகரை சேர்ந்த பூலையாபாண்டி மகன் ஆனந்தபாண்டி (வயது 51) என்பவர் ஊழியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இரவில் அவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் முறப்பநாடு மணக்கரையை சேர்ந்த சங்கரசுப்பு மகன் அருள்ராஜ் என்ற அருணா என்ற சின்ன அருணா (30), நாசரேத் குறிப்பன்குளம் புதுப்பச்சேரியை சேர்ந்த ரத்தினப்பாண்டி மகன் குணசேகரன் என்ற குணா (28), ஸ்ரீவைகுண்டம் பொன்னன்குறிச்சியை சேர்ந்த செந்தில்குமார் மகன் முத்துகுமார் என்ற முத்து (21) ஆகியோரை நாசரேத் போலீசார் கைது செய்தனர். இந்த 3 பேரும் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
இந்த நிலையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அந்த 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், அருள்ராஜ் என்ற அருணா என்ற சின்ன அருணா, குணசேகரன் என்ற குணா, முத்துகுமார் என்ற முத்து ஆகிய 3 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார். நடப்பு ஆண்டில் இதுவரை போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 34 பேர் உட்பட 148 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.