30 லட்சம் லிட்டர் குடிநீர் உடனே வழங்க வேண்டும்
ஆலங்குளத்துக்கு அம்ருத் திட்டத்தின் கீழ் 30 லட்சம் லிட்டர் குடிநீர் உடனே வழங்க வேண்டும் என்று பி.எச்.மனோஜ்பாண்டியன் வலியுறுத்தினார்.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின் போது ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ்பாண்டியன் பேசியதாவது:-
ஆலங்குளம் பேரூராட்சியில் அருகில் இருக்கின்ற தாமிரபரணி ஆற்றில் இருந்து பல 100 கிலோமீட்டர் தொலைவிற்கு குடிநீர் வழங்கப்படுகிறது என்பதை அமைச்சர் அறிவார்கள். ஆனால் அருகிலே இருக்கின்ற ஆலங்குளம் பேரூராட்சிக்கு இப்போது அம்ருத் 2.0 அந்தத்திட்டம் வகுக்கப்பட்டு அனுமதிக்காக அனுப்பப்பட்டிருக்கிறது. ஆகவே 30 லட்சம் லிட்டர் குடிநீர் அங்குள்ள மக்களுக்கு தேவை. அதற்கு அமைச்சர் அந்த அம்ருத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பார்களா என்பதை தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன் என்று பேசினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு உறுப்பினர், மனோஜ் பாண்டியன் கேட்டுக்கொண்ட பிறகு தான் அதிகாரிகளிடம் சொல்லி அதற்கான திட்டம் இப்போது தீட்டப்பட்டிருக்கிறது. குறிப்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் இந்த ஆண்டு வருகின்ற 31-ந் தேதிக்குள் இப்போது ஜல் ஜீவன் திட்டத்திலும், அம்ருத் திட்டத்திலும் கிட்டத்தட்ட 16 ஆயிரம் கோடிக்கு புதிய திட்டங்கள் எடுக்கப்பட்டிருக்கிறது. அதிலே ஆலங்குளம் பேரூராட்சியும் சேர்ந்திருக்கிறது. எனவே அதை விரைந்து முடித்து உங்களுக்கு அந்த குடிநீர் தருகிற பணியை நீண்ட காலமாக கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நான் நன்றாக அறிவேன். உங்களுக்கு தேவையான அளவு குடிநீர் தருவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் நிச்சயமாக எடுப்போம் என்றார்.