30 லட்சம் இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
30 லட்சம் இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
மண்டபம்
மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினத்தில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதுபோல் மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் முன்னேற்றத்தை பெருக்கும் வகையில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் அவ்வப்போது இறால் மீன் குஞ்சுகள் கடலில் விடப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் சார்பில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின்கீழ் மண்டபம் தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இறால் குஞ்சுகள் கடலில் விடும் நிகழ்ச்சி மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி தமிழ்மணி தலைமையில் நடைபெற்றது.
இதற்காக தண்ணீர் நிரப்பப்பட்ட கேன்களில் 30 லட்சம் இறால் குஞ்சுகள் மண்டபம் தென் கடல் பகுதிக்கு மீன் பிடி படகில் கொண்டு செல்லப்பட்டு கடலில் விடப்பட்டன. நிகழ்ச்சியில் மண்டபம் மீன்துறை உதவி இயக்குனர் அப்துல்காதர் ஜெய்லானி, மீன்துறை ஆய்வாளர் கோமதி மற்றும் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய மூத்த விஞ்ஞானி ஜான்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிதி ஆண்டான பிப்ரவரி மாதத்தில் இருந்து தற்போது வரையிலும் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் தற்போது வரை 36.54 மில்லியன் இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளதாக மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.