எருது விடும் விழாவில் மாடு முட்டி 30 பேர் காயம்


எருது விடும் விழாவில் மாடு முட்டி 30 பேர் காயம்
x

நாட்டறம்பள்ளி அருகே நடந்த எருது விடும்விழாவில் மாடு முட்டி 30-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

திருப்பத்தூர்

எருது விடும் விழா

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த கொத்தூர் கிராமத்தில் மயிலார் பண்டிகையையொட்டி எருது விடும் விழா நடைபெறுவது வழக்கம். இந்த முறை மாவட்ட நிர்வாகம் உரிய பாதுகாப்பு இல்லை என கூறி மூன்று முறை எருதுவிடும் விழாவை தள்ளி வைத்தது. இதனை கண்டித்து நேற்று முன்தினம் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நேற்று எருது விடும் விழா நடைபெற்றது. இதில் திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, தர்மபுரி மாவட்டங்களில் இருந்தும், ஆந்திர மாநிலத்தில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

30 பேர் காயம்

நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் முன்னிலையில் விழாக்குழுவினர் உறுதி மொழி ஏற்றனர். கால் நடை மருத்துவர்கள் மாடுகளை பரிசோதனை செய்து பின்னர் வாடிவாசலில் இருந்து காளைகளை அவிழ்த்து விட்டனர். காளைகள் ஓடும் பாதையில் தேங்காய் நார் இல்லாமல் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள விதிகளை பின்பற்றாமல் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

அப்போது காளையின் மீது கை போட முயன்ற 30-க்கும் மேற்பட்டோர் மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தனர். வாணியம்பாடி துணைபோலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

காளைகளின் வாலில் கிளிப் மாட்டியதாகவும், வயிற்றை இறுக்கி கயிறு கட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.


Next Story