தலைமறைவாக இருந்த 30 ரவுடிகள் கைது


தலைமறைவாக இருந்த 30 ரவுடிகள் கைது
x

நாமக்கல் மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த 30 ரவுடிகள் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல்

உறுதிமொழி பத்திரம்

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அவர்களின் செய்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இவர்களிடம் 6 மாதங்கள் அல்லது ஓராண்டு எந்த குற்றச்செயலிலும் ஈடுபட மாட்டேன் என்று உதவி கலெக்டர் முன்னிலையில் ஆஜர்படுத்தி உறுதிமொழி பத்திரம் வாங்கி வருகின்றனர்.

இந்த உறுதிமொழியை மீறும் ரவுடிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். இதேபோல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள ரவுடிகள், குற்றச்செயல்களில் ஈடுபட்டு தலைமறைவான ரவுடிகள் போன்றவர்களை கைது செய்ய டி.ஜி.பி. சைலேந்திர பாபு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் தமிழகம் முழுவதும் நேற்று போலீசார் 'மின்னல் ரவுடி வேட்டை' என்கிற பெயரில் ரவுடிகளை கைது செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

30 ரவுடிகள் கைது

நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில் போலீசார் ரவுடிகளை கைது செய்யும் பணியில் ஈடுபட்டனர். நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் மற்றும் பரமத்திவேலூர் உட்கோட்டங்களில் அந்தந்த துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்த வேட்டையில் மாவட்டம் முழுவதும் 30 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story