30 தூய்மை பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்
குழித்துறை நகராட்சியில் 30 தூய்மை பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நகராட்சியில் குப்பை அகற்றப்படாததால் மக்கள் அவதிக்குள்ளானார்கள்.
குழித்துறை:
குழித்துறை நகராட்சியில் 30 தூய்மை பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நகராட்சியில் குப்பை அகற்றப்படாததால் மக்கள் அவதிக்குள்ளானார்கள்.
குழித்துறை நகராட்சி
குழித்துறை நகராட்சி பகுதியில் 21 வார்டுகள் உள்ளன. அந்த பிரிவில் உள்ள தூய்மை அதிகாரியின் கீழ் 30 பேர் தூய்ைம பிரிவில் பணியாற்றி வருகிறார்கள். மேலும் ஒரு பெண் பணியாளர் கடந்த பல ஆண்டுகளாக அலுவலக உதவியாளர் பிரிவில் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் அலுவலக பிரிவில் பணியாற்றி வந்த பணியாளர் நேற்று அங்கிருந்து மாற்றம் செய்யப்பட்டு திடீரென்று தூய்மை பணிக்கு அனுப்பப்பட்டார்.
அந்த பெண் தூய்மை பணியாளர் அலுவலக பணியுடன் நகராட்சி தலைவர் அலுவலக பணிகளையும் செய்து வந்தார். எனவே அந்தப் பணியாளரை மீண்டும் அலுவலக பணியில் அமர்த்த வேண்டும் என்று குழித்துறை நகராட்சி தலைவர் பொன் ஆசைத்தம்பி வலியுறுத்தினார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
திடீர் வேலை நிறுத்தம்
அதைத்தொடர்ந்து அங்கிருந்த 30 தூய்மை பணியாளர்களும், அந்த பெண் பணியாளரை தங்களுடன் தூய்மை பணிக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தி தூய்மை பணிக்கு செல்லாமல் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நகராட்சி பகுதிகளில் உள்ள 21 வார்டுகளிலும் நேற்று குப்பை கூளங்கள் மற்றும் கழிவுகள் அப்புறப்படுத்தாமல் குவிந்து கிடந்தது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள மக்கள் அவதிக்குள்ளானார்கள்.
இந்தநிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 30 துப்புரவு பணியாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆணையாளர் ராமதிலகத்துக்கு குழித்துறை நகராட்சித் தலைவர் பொன் ஆசைத்தம்பி தலைமையில் அனைத்து கட்சி நகராட்சி உறுப்பினர்களும் மனு கொடுக்க சென்றனர். அவர் இல்லாததால் நகராட்சி மேலாளரிடம் மனுவை கொடுத்தனர்.
அந்த மனுவில் துணைத் தலைவர் பிரபின் ராஜா உறுப்பினர்கள் விஜு, ரெத்தினமணி, சர்தார்ஷா, ஜெயந்தி, அருள்ராஜ், ஆட்லின் கெனில், ஷாலின் சுஜாதா, செல்வகுமாரி, லலிதா, விஜயலட்சுமி, ரவி, ஜெயின் சாந்தி, ரோஸ்லெட், லில்லி புஷ்பம், ரீகன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
பெரும் தீங்கு
அதன்பிறகு தலைவர் பொன் ஆசைத்தம்பி மற்றும் உறுப்பினர்கள் கூறியதாவது:-
குழித்துறை நகராட்சியில் தூய்மை பிரிவை சேர்ந்த ஒரு பெண் பணியாளர் கடந்த பல ஆண்டுகளாக அலுவலக பணிகள் செய்து வருகிறார். நகராட்சி தலைவர் செயல்படும் போது அங்குள்ள அலுவலக பணிகளையும் அவர் செய்து வருகிறார். அத்தகைய அனுபவசாலியான அவரை திடீரென்று இன்று (அதாவது நேற்று) தூய்மை பணிக்கு மாற்றி உள்ளனர். இது மிகவும் கண்டனத்திற்குரியதாகும். கார்த்திகை திருநாளான இன்று (அதாவது நேற்று) தூய்மை பணியாளர்கள் தங்கள் கடமையை செய்யாமல் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும் இப்படி குப்பை கூளங்களை குவிய வைத்து சுகாதார கேட்டை ஏற்படுத்தி இருப்பது சமூகத்திற்கு செய்யக்கூடிய பெரும் தீங்காகவே உள்ளது. நீண்ட காலமாக அலுவலக உதவியாளராக பணி செய்து வரும் அந்த பெண் பணியாளரை அதே பணியில் தொடர்ந்து அமர்த்த வேண்டும். மேலும் இந்த திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 30 சுகாதாரப் பணியாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.