30 ஆயிரம் மீனவர்கள் வேலை இன்றி தவிப்பு
பலத்த சூறைக்காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக 6-வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையால் 30 ஆயிரம் மீனவர்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர்.
பனைக்குளம்,
மீன்பிடிக்க தடை
ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் தொடர்ந்து வீசி வரும் பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக கடந்த 29-ந் தேதியில் இருந்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம் என மாவட்டம் முழுவதும் உள்ள மீனவர்கள் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீன்பிடிக்க செல்ல மீன் துறை அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மன்னார் வளைகுடா கடலில் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசுவதுடன், கடல் சீற்றமாக இருப்பதால் மறு அறிவிப்பு வரும் வரையிலும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லக்கூடாது என மீண்டும் மீன் துறை அதிகாரிகளால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனால் 6-வது நாளாக மண்டபம், பாம்பன், ராமேசுவரம் என மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 3500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு, பைபர் படகுகளும் மீன் பிடிக்க செல்லாமல் கரையோரத்தில் உள்ள கடல் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மீனவர்கள் தவிப்பு
இதனிடையே மாவட்டத்தில் தொடர்ந்து 6-வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையால் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களும், அதை சார்ந்த மீன்பிடி தொழிலாளர்களும் வருமானம் இன்றியும், வேலை வாய்ப்பு இழந்தும் தவித்து வருகின்றனர்.
மீனவ கிராமங்களை ஒட்டிய கடற்கரை பகுதி முழுவதும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாத காரணத்தால் வெறிச்சோடியே காணப்பட்டு வருகின்றன.
6 நாட்கள் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் அரசுக்கு பல கோடி ரூபாய் அந்நிய செலவாணி இழப்பும் ஏற்பட்டுள்ளது.