300 ஏக்கரில் வாகன நிறுத்துமிடம்: 5 லட்சம் சதுரடியில் பந்தல்; 35 ஏக்கரில் உணவு கூடம்- அ.தி.மு.க. மாநாடு குறித்து உதயகுமார் பேட்டி
அ.தி.மு.க. மாநாட்டிற்கு 5 லட்சம் சதுரடியில் பந்தல், 35 ஏக்கரில் உணவு கூடம் மற்றும் 300 ஏக்கரில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளதாக ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
அ.தி.மு.க. மாநாட்டிற்கு 5 லட்சம் சதுரடியில் பந்தல், 35 ஏக்கரில் உணவு கூடம் மற்றும் 300 ஏக்கரில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளதாக ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
5 லட்சம் சதுரஅடி
உசிலம்பட்டியில் அ.தி.மு.க. மாநாட்டிற்கான அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நகர் செயலாளர் பூமாராஜா தலைமை தாங்கினார். மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் துரைதனராஜன் வரவேற்றார். செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா, சேடப்பட்டி ஒன்றிய செயலாளர் பிச்சைராஜன், எழுமலை நகர் செயலாளர் வாசிமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அழைப்பிதழ், மரக்கன்றுகள் வழங்கினார்.
பின்னர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:- மதுரையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க.வின் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நடக்கிறது. அதில் கலந்து கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இந்த மாநாடு 65 ஏக்கர் பரப்பளவில் நடக்கிறது. அதில் 5 லட்சம் சதுரடியில் மாநாடு பந்தல் மற்றும் 35 ஏக்கரில் உணவு கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்திய அளவில் யாரும் மாநாட்டிற்காக இது போன்ற பந்தல் அமைக்கப்படவில்லை. இது தவிர 300 ஏக்கரில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு உள்ளது.
சுடச்சுட உணவு
மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் காலை முதல் இரவு வரை சுடச்சுட உணவு வழங்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ள சேலம், நாமக்கல், கோவை, கிருஷ்ணகிரி, வேலூர், கரூர், கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் கப்பலூர் டோல்கேட் வழியாக வருகிறது. சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், திருப்பத்தூர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 30 மாவட்டங்கள் விரகனூர் பைபாஸ் வழியாகவும், தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்கள் வளையங்குளம் ரிங் ரோடு வழியாகவும் வருகின்றன. இந்த வாகனங்களை நிறுத்தும் வகையில் 13 இடங்களில், 300 ஏக்கரில் வாகன நிறுத்துமிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு 8-வது உலக அதிசயமாக திகழும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சரவணன், மாணிக்கம், தமிழரசன், மாவட்ட கவுன்சிலர் சுதாகரன், கூட்டுறவு சங்க தலைவர் ரகு, மாவட்ட மாணவரணி செயலாளர் மகேந்திரபாண்டி, நகர் பேரவை செயலாளர் லட்சுமணன், நகராட்சி கவுன்சிலர்கள் பொன் பாண்டியம்மாள், தேவசேனா, முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள் உக்கிர பாண்டி, ராமதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.