அரியூரில் 300 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது


அரியூரில் 300 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
x

அரியூரில் ஏரி உபரி நீர் வெளியேறுவதால் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

வேலூர்

அரியூரில் ஏரி உபரி நீர் வெளியேறுவதால் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

ஏரி நிரம்பியது

வேலூரை அடுத்த அரியூரில் அம்மையப்பன் நகர் அமைந்துள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மாண்டஸ் புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையினால் அரியூர் ஏரி நிரம்பியது. அதில் இருந்து உபரிநீர் தொடர்ந்து வெளியேறி வருகிறது. உபரிநீர் வெளியேற கால்வாய் வசதி இல்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அம்மையப்பன் நகரில் உள்ள 300-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஒரு சில இடங்களில் இடுப்பளவுக்கு நீர் தேங்கி நிற்கிறது. எனவே அப்பகுதியை சேர்ந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

மேலும் வேலூரில் இருந்து அரியூர் செல்லும் சாலையில் ஏரி நீர் வெள்ளம் போன்று பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதையறிந்த வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மற்றும் அதிகாரிகள் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

தொரப்பாடி ஏரிக்கு..

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

கடந்த நிவர் புயலின் போதே இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் அதற்கு இதுவரை உரிய தீர்வு காணப்படவில்லை. இந்த ஆண்டும் பெய்த மழைக்கு வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இப்பகுதியில் உள்ள கால்வாய் முறையாக தூர்வாரப்படவில்லை. ஏரி நீர் வெளியேறும் கால்வாய் முறையாக பராமரிக்காமல் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நாங்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க புகார் அளித்தும் தீர்வு காணவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் கூறுகையில், அரியூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்ல தற்காலிக தீர்வாக எதிர்புறம் உள்ள தெருவின் ஓரம் கால்வாய் அமைத்து உபரி நீரை தொரப்பாடி ஏரிக்கு திருப்பிவிடும் பணியை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.


Next Story