300 கிலோ புகையிலை பொருட்கள்-கார் பறிமுதல்


300 கிலோ புகையிலை பொருட்கள்-கார் பறிமுதல்
x

புன்னம் பகுதியில் நடந்த வாகன சோதனையில் 300 கிலோ புகையிலை ெபாருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.

கரூர்

வாகன சோதனை

கரூர் மாவட்டம், புன்னம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பல்வேறு வகையான புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதினி தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நெப்போலியன், பெரியசாமி மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் புன்னம் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது முருகன் என்பவரது கடையில் ஏராளமான புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவற்றை பறிமுதல் செய்து முருகன் என்பவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

விசாரணையில், நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலம் புதூர்ரோடு பகுதியை சேர்ந்த முனியசாமி (வயது42) என்பவர் காரில் கொண்டு வந்து புகையிலை பொருட்களை கொடுத்துச் சென்றதாக கூறினார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கொண்ட குழுவினர் ஆத்தூர்- நாணப்பரப்பு நெடுஞ்சாலையில் உள்ள மூர்த்திபாளையம் பஸ் நிறுத்தம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

சிறையில் அடைப்பு

அப்போது அந்த வழியாக அதிவேகமாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த காரை வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனை நடத்தியதில் அந்த காருக்குள் இருந்த சாக்கு மூட்டைகளில் சுமார் 300 கிலோவுக்கு மேல் பல்வேறு வகையான புகையிலைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றையும், காரையும் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story