குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 300 மனுக்கள் குவிந்தன


குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  300 மனுக்கள் குவிந்தன
x

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 300 மனுக்கள் குவிந்தன

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 300 மனுக்கள் குவிந்தன.

குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.

சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மொத்தம் 300 மனுக்கள் கொடுத்தனர்.

ஸ்டெர்லைட்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பை சேர்ந்த சில்லாநத்தம், சாமிநத்தம், பண்டாரம்பட்டி, மடத்தூர், தெற்கு வீரபாண்டியபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் தனித்தனியாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் வேலை பார்த்து வந்தனர். கடந்த 3½ வருடங்களாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெளியூர் சென்று வேலை பார்த்து வருகின்றனர். இதனால் எங்களது குடும்ப சூழ்நிலையை சமாளிக்க மிகவும் சிரமமாக உள்ளது. எங்கள் குடும்பத்தினர் மீண்டும் உள்ளூரில் வேலை வாய்ப்பு பெறுவதற்கு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

மின்கட்டணம்

தூத்துக்குடி ராகுல்காந்தி அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர் சங்க செயலாளர் சாமுவேல் ஞானதுரை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், ஏழை-நடுத்தர மக்களை பாதிக்கக்கூடிய மின்சார கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், மின்சார வாரியத்துக்கு இழப்பு ஏற்படுத்திய நிர்வாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களிடம் வசூலித்து கடனை நேர் செய்ய வேண்டும், என்று கூறி உள்ளார்.


Next Story