ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 300 பேர் ஒட்டுமொத்த விடுப்பு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 300 பேர் ஒட்டுமொத்த விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் முடங்கின.
விடுப்பு போராட்டம்
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். வளர்ச்சித்துறையில் திணிக்கப்படும் பணி நெருக்கடிகள், காலம் கடந்த ஆய்வுகள், விடுமுறை தின, இரவு நேர ஆய்வுகள், வாட்ஸ்-அப், காணொலி ஆய்வுகள் அனைத்தையும் கைவிட வேண்டும். ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித்திட்ட கணினி இயக்குனர்கள் அனைவருக்கும் 2017-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி இளநிலை உதவியாளர்களுக்கான ஊதியம் வழங்கி அனைவரையும் பணி வரன்முறை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 23, 24-ந்தேதிகளில் ஒட்டுமொத்த சிறு விடுப்பு போராட்டமும், டிசம்பர் 14-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டமும் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் அறிவித்தனர். அதன்படி, தேனி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஒட்டுமொத்த விடுப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
பணிகள் முடங்கின
மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் சுமார் 390 பேர் பணியாற்றுகின்றனர். அவர்களில் 300 பேர் நேற்று விடுப்பு எடுத்தனர். இதனால், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலகம், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம் ஆகியவை அலுவலகர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, கடமலை-மயிலை, போடி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் ஓரிரு பணியாளர்கள் மட்டுமே இருந்ததால் அவையும் வெறிச்சோடி கிடந்தன. ஒட்டுமொத்த விடுப்பு போராட்டத்தால் இந்த அலுவலக பணிகள் முடங்கின. பல்வேறு கோரிக்கைகள், பணிகள் தொடர்பாக அலுவலகங்களுக்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இன்றும் (வியாழக்கிழமை) ஒட்டுமொத்த விடுப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், இன்றும் பணிகள் பாதிக்கப்படும்.