300 டன் குப்பைகள் அகற்றம்
தஞ்சை மாநகரில் தீபாவளி பண்டிகையை யொட்டி கடைவீதிகளில் குப்பைகள் குவிந்து கிடந்தன. ஒரே நாளில் மட்டும் 300 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
தஞ்சை மாநகராட்சி பகுதியில் 51 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மாநகராட்சி வாகனங்கள் மூலம் அள்ளப்பட்டு ஜெபமாலைபுரத்தில் உள்ள குப்பைக்கிடங்கு மற்றும் ஆங்காங்கே நுண்உரம் தயாரிக்கும் மையத்துக்கும் கொண்டு செல்லப்பட்டு கொட்டப்படுவது வழக்கம். இந்த வார்டுகளில் தினமும் 105 முதல் 115 டன் வரை குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. மாநகரட்சி தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் என 600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையொட்டி கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது.
குப்பைகள் குவிந்தன
தஞ்சை காந்திஜி சாலை, ஆபிரகாம் பண்டிதர் சாலை, பைபாஸ் நிலைய பகுதி, அண்ணாசாலையில் இருந்து கீழவாசல் செல்லும் சாலை, தெற்கு அலங்கம், கீழஅலங்கம், தெற்கு வீதி, கீழராஜவீதி, திலகர் திடல் பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மேலும் தரைக்கடைகளும் வழக்கத்தை விட அதிக அளவில் போடப்பட்டன. இதனால் வியாபாரம் அதிகஅளவில் நடைபெற்றது. தீபாவளி பண்டிகை மற்றும் அதற்கு முந்தைய நாள் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு கூட்டம் காணப்பட்டது. தீபாவளி கடைகள் அகற்றப்பட்ட பின்னர் குப்பைகளும் ஆங்காங்கே தேங்கிக்கிடந்தன. கடைவீதிகளின் அனைத்து பகுதிகளிலும், முக்கிய வீதிகளிலும் வழக்கத்தை விட குப்பைகள் அதிக அளவில் காணப்பட்டன.
300 டன் அகற்றம்
தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளும், தீபாவளி பண்டிகை நாளிலும் வழக்கமான குப்பைகளுடன், பட்டாசு குப்பைகளும் சேர்ந்ததால் 2 நாட்களில் குப்பைகள் அதிகமாகின. எனவே நேற்று அதிகாலை 4.30 மணி முதல் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 600 பேர் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த தூய்மை பணியில் லாரிகள், மினி லாரிகள், சரக்கு ஆட்டோக்கள், என 40 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. இதன்மூலம் ஏறத்தாழ 300 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. ஒரே நாளில் 2 மடங்குக்கும் அதிகமான குப்பைகள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது