2-ம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வில் 308 பேர் தேர்வு
வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் 2-வது நாள் நடைபெற்ற 2-ம் நிலை காவலர்களுக்கான உடல்தகுதி தேர்வில் 308 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் 2-வது நாள் நடைபெற்ற 2-ம் நிலை காவலர்களுக்கான உடல்தகுதி தேர்வில் 308 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
உடல்தகுதி தேர்வு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத்தேர்வில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 1,059 பேர் தேர்ச்சி பெற்றனர்.
அவர்களுக்கு முதற்கட்டமாக உடல்தகுதி தேர்வு வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது.
முதல்நாளில் பங்கேற்க 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் 359 பேர் பங்கேற்றனர். 41 பேர் கலந்து கொள்ளவில்லை. உடல்தகுதி தேர்வில் 294 பேர் தேர்வாகினர்.
இந்த நிலையில் 2-வது நாளாக இன்று வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் உடல்தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் பங்கேற்க 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதில் 348 பேர் கலந்து கொண்டனர். 52 பேர் பங்கேற்கவில்லை. அவர்களை வரிசையாக அமரவைக்கப்பட்டு, சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.
308 பேர் தேர்வு
அதைத்தொடர்ந்து உயரம், மார்பளவு அளவீடு செய்யப்பட்டது. அப்போது 3 பேரின் மார்பளவு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட குறைவாக காணப்பட்டது.
இதையடுத்து அரசு டாக்டர் அவர்களின் மார்பை அளவிட்டு குறைவாக இருப்பதை தெரிவித்தார். அதைத்தொடர்ந்து மீதமுள்ளவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
அதில் 7 நிமிடங்களில் ஓடிமுடித்தவர்கள் தேர்வாகினர். உயரம், மார்பளவு, ஓட்டப்பந்தயத்தின் முடிவில் 308 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், துணைபோலீஸ் சூப்பிரண்டுகள் உடல்தகுதி தேர்வை மேற்பார்வையிட்டனர்.
2 நாட்கள் நடந்த உடற்தகுதி தேர்வில் 602 பேர் தேர்வாகி உள்ளனர்.
நாளை (புதன்கிழமை) 3-ம் நாள் உடற்தகுதி தேர்வில் பங்கேற்க 259 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2-ம் கட்ட தேர்வு 9 முதல் 11-ந் தேதி வரை நடைபெற உள்ளது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.