ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் 17 பதவிகளுக்கு 31 பேர் போட்டி


ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் 17 பதவிகளுக்கு 31 பேர் போட்டி
x

ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் 17 பதவிகளுக்கு 31 பேர் போட்டியிடுகின்றனர்.

திருச்சி

இடைத்தேர்தல்

திருச்சி மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரை காலியாக உள்ள கிராம ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட 17 பதவிகளுக்கு வருகிற 9-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. மனுத்தாக்கல் முடிந்து வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று வேட்பு மனு வாபஸ் நடைபெற்றது.

இடைத்தேர்தலைெயாட்டி துறையூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 7 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்று 3 பேர் தங்களது வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். ஏற்கனவே கடந்த 28-ந்தேதி நடந்த வேட்புமனு பரிசீலனையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பதவிக்கு தற்போது 3 பேர் களத்தில் உள்ளனர்.

வேட்புமனு வாபஸ்

மருங்காபுரி ஒன்றியம் பளுவஞ்சி ஊராட்சி மன்ற தலைவருக்கு 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் ஒருவர் வேட்புமனுவை வாபஸ் பெற்ற நிலையில், தற்போது 3 பேர் களத்தில் உள்ளனர். அந்தநல்லூர் ஒன்றியம் அல்லூர் வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த 4 பேரில் 2 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.

மணப்பாறை ஒன்றியம் புத்தாநத்தம் வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்த 3 பேரில், ஒருவர் வேட்புமனுவை வாபஸ் பெற்றார். தா.பேட்டை ஒன்றியம் சிட்டிலரை வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த 2 பேரில் ஒருவர் வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.

6 பேர் போட்டியின்றி தேர்வு

இந்நிலையில் திருவெறும்பூர் ஒன்றியம் பனையக்குறிச்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், மணப்பாறை ஒன்றியத்தில் எப்.கீழையூர் வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், புள்ளம்பாடி ஒன்றியம் நெய்குளம் வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், தொட்டியம் ஒன்றியம் பிடாரமங்கலம் வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், துறையூர் ஒன்றியம் கொட்டையூர் வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் தா.பேட்டை ஒன்றியம் சிட்டிலரை வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவர் மட்டுமே களத்தில் உள்ளார். இதைத்தொடர்ந்து எதிர்த்து யாரும் களம் காணாத நிலையில் அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர்.

மொத்தத்தில் காலியாக உள்ள கிராம ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட 17 பதவிகளுக்கு 40 பேர் மனு தாக்கல் செய்த நிலையில் ஒருவர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.நேற்று 8 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளனர். மேலும் 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர். தற்போது 31 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.


Next Story