தூத்துக்குடி கடற்கரையில் ரூ.31 கோடி திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் சிக்கியது


தூத்துக்குடி கடற்கரையில் ரூ.31 கோடி திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் சிக்கியது
x
தினத்தந்தி 20 May 2023 12:15 AM IST (Updated: 20 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி கடற்கரையில் நடந்த அதிரடி சோதனையில் ரூ.31 கோடி மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் சிக்கியது. அதை விற்க முயன்ற அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி கடற்கரையில் நடந்த அதிரடி சோதனையில் ரூ.31 கோடி மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் சிக்கியது. அதை விற்க முயன்ற அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதிரடி சோதனை

தூத்துக்குடி மாவட்ட கடற்கரை வழியாக பல்வேறு கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் கடலோர பாதுகாப்பு போலீசார், கடலோர காவல்படையினர், உளவுத்துறையினர், சுங்கத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி கடற்கரை பகுதியில் சட்டவிரோத பொருட்கள் விற்பனை நடப்பதாக தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சூப்பிரண்டு முரளி தலைமையிலான அதிகாரிகள் கடற்கரை பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

திமிங்கில உமிழ்நீர் கட்டிகள்

அப்போது தூத்துக்குடி தெர்மல் நகர் அருகே உள்ள கடற்கரை பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற 4 பேரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், கேரளாவை சேர்ந்த அணில்குமார், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த டெத்தோன், ஆனந்தராஜ், தூத்துக்குடியை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் ஈசுவரன் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவர்கள் வைத்து இருந்த பையை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த பையில் 'ஆம்பர்கிரீஸ்' எனப்படும் திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் இருந்தது தெரியவந்தது. அதில் மொத்தம் ரூ.31 கோடியே 68 லட்சம் மதிப்பிலான 18 கிலோ திமிங்கில உமிழ்நீர் கட்டிகள் இருந்தன.

கைது

இந்த திமிங்கில உமிழ்நீர் கட்டி நறுமண பொருட்கள், வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இதனை வெளிநாடுகளில் அதிக விலைக்கு வாங்கி வருகின்றனர். இதை சட்டவிரோதமாக 4 பேரும் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து 4 பேரையும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story