தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் ரூ.32 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 2,203 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.32 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 2,203 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.32 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றம்
வேலூர் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி என்.வசந்தலீலா தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இந்த மக்கள் நீதிமன்றம் மக்களுக்காக நடத்தப்படுகிறது. பல்வேறு வழக்குகள் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றத்தின் பயன் அதிகமானது. இதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கோடைகாலத்தில் பல நீதிமன்றங்களுக்கு விடுமுறை இருந்தபோதிலும், மக்கள் நீதிமன்றம் செயல்படுகிறது. பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் தீர்வு காணப்பட்டு இழப்பீடும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
விபத்து இழப்பீடு
வேலூர் மக்கான் பகுதியை சேர்ந்தவர் பர்வீன்தாஜ். இவரது மகன் அபுஅனீப் (வயது 20), கல்லூரி மாணவர். இவர் காஞ்சீபுரம் அருகே மோட்டார்சைக்கிளில் 2019-ம் ஆண்டு சென்றபோது லாரி மோதி உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.32 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவுக்கான ஆணையை முதன்மை நீதிபதி வசந்தலீலா, அபுஅனீப் குடும்பத்தினரிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ரூ.32 கோடி இழப்பீடு
இதேபோன்று வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள 10 நீதிமன்றங்களில் 18 அமர்வுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் மோட்டார்வாகன விபத்து வழக்குகள், நில ஆர்ஜித வழக்கு, வங்கி வராக்கடன் வழக்கு, குடும்ப நல வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது. அதன்படி 1,661 வங்கி தொடர்பான வழக்குகள், 7,067 நிலுவையில் உள்ள பிற வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 138 வங்கி தொடர்பான வழக்குகள், 2,065 நிலுவையில் உள்ள பிற வழக்குகள் என மொத்தம் 2,203 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.32 கோடியே 19 லட்சத்து 10 ஆயிரத்து 729 இழப்பீடு தொகையாக சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டது.