பஸ் சக்கரத்தில் சிக்கி 32 ஆடுகள் பலி
தனியார் பஸ் சக்கரத்தில் சிக்கி 32 ஆடுகள் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
முதுகுளத்தூர்,
தனியார் பஸ் சக்கரத்தில் சிக்கி 32 ஆடுகள் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
பஸ் மோதியது
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள கொல்லங்குளத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 65). இவர் ஆடு வளர்த்து வருகிறார். இந்த நிலையில் தனது 110 செம்மறி ஆடுகளை, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள பகுதியில் ஆட்டு கிடை போடுவதற்கு கொண்டு சென்றார். பின்னர் அங்கிருந்து ஆடுகளுடன் சாலையோரமாக தனது சொந்த ஊரை நோக்கி நேற்று காலை வந்து கொண்டிருந்தார்.
முதுகுளத்தூர் சாலையில் பெரியபாலம் அருகே ஆடுகள் வந்து கொண்டிருந்தன. அந்த நேரத்தில் முதுகுளத்தூரில் இருந்து கமுதி நோக்கி சென்ற தனியார் பஸ், திடீரென்று ஆடுகள் கூட்டத்தில் புகுந்தது.
32 ஆடுகள் சாவு
கண்இமைக்கும் நேரத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி ஆடுகள் செத்தன. சாலையில் ஆங்காங்கே சிதறி கிடந்த ஆடுகளின் உடல்கள் பரிதாபத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து பேரையூர் போலீசில் திருநாவுக்கரசு புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆறுதல் கூறினார். ஆட்டின் உரிமையாளர் திருநாவுக்கரசுக்கு, புல்வாய்குளம் ஊராட்சி மன்ற தலைவர் தினவேல்ராமன் நிதியுதவி வழங்கினார்.