ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த 32 குரங்குகள் கூண்டில் சிக்கின
நாகர்கோவில் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த 32 குரங்குகள் கூண்டில் சிக்கின.
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த 32 குரங்குகள் கூண்டில் சிக்கின.
குரங்குகள் அட்டகாசம்
நாகர்கோவில் அருகே உள்ள புலியூர்குறிச்சி மற்றும் உதயகிரி கோட்டை பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி வனப்பகுதி அருகே உள்ளதால் அவ்வப்போது வனவிலங்குகள் ஊருக்குள் சென்று பொதுமக்களை அச்சுறுத்தியது. இதனை தடுக்க பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் ஏராளமான குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்ததால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். எனவே குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கூண்டு வைத்து பிடிக்கப்பட்டன
மக்களின் கோரிக்கையை ஏற்று வெள்ளிமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனத்துறை அதிகாரிகள் குரங்குகளை பிடிக்க முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கூண்டும் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு கூண்டில் மொத்தம் 32 குரங்குகள் சிக்கின. அதனை வனத்துறை அதிகாரிகள் பிடித்து வெள்ளிமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட அடர்ந்த காட்டில் பாதுகாப்பாக விட்டனர்.