தென்காசியில் போராட்டம் நடத்திய பா.ஜனதாவினர் 33 பேர் கைது
பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காயை சேர்க்கக்கோரி தென்காசியில் போராட்டம் நடத்திய பா.ஜனதாவினர் 33 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது அங்கு கொண்டு வந்திருந்த தேங்காய்களை பொதுமக்கள் எடுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காயையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தென்காசி புதிய பஸ் நிலையம் முன்பு பா.ஜனதா சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய அணி மாவட்ட தலைவர் முத்துப்பாண்டியன் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா, மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாலகுருநாதன், அருள்செல்வன், ராமநாதன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினார்கள். மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் செந்தூர்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக சுமார் 1,000 தேங்காய்களை கொண்டு வந்து வைத்திருந்தனர். ஆனால் போலீசார், ஆர்ப்பாட்டத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தேங்காய்களை பொதுமக்களுக்கு வழங்கக்கூடாது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட மொத்தம் 33 பேரை கைது செய்தனர். பின்னர் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையே, போராட்டம் நடந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த தேங்காய்களை பொதுமக்கள் போட்டி போட்டு எடுத்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.