3,300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - ஒருவர் கைது


ராமநாதபுரம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 3,300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

பரமக்குடி அருகே உள்ள மேலப்பெருங்கரை பகுதியில் ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவதாக குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் அசோக், ஏட்டுகள் குமாரசாமி, தேவேந்திரன் ஆகியோர் அந்தப் பகுதியில் சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனையிட்டபோது அதில் சில மூடை ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக காரில் இருந்தவரை பிடித்து விசாரித்தபோது அவர் கடலாடி அருகே உள்ள உச்சிநத்தம் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் சசிக்குமார் (வயது 32) என்பது தெரிந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அருகில் உள்ள வயக்காட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. இதை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் தலா 30 கிலோ எடையுள்ள 110 பைகளில் 3 ஆயிரத்து 300 கிலோ ரேஷன் அரிசியை கைப்பற்றினர். இது தொடர்பாக விருதுநகர் மாவட்டம் சேது நாராயணபுரம் இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த ராஜ் என்பவரின் மகன் அஜித்குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்தான் இந்த ரேஷன் அரிசியை பல்வேறு பகுதிகளில் சேகரித்து பதுக்கி வைத்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.


Related Tags :
Next Story