2-ம் கட்ட உடல் தகுதி தேர்வில் 338 பேர் தேர்வு


2-ம் கட்ட உடல் தகுதி தேர்வில் 338 பேர் தேர்வு
x

வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடந்த 2-ம் நிலை காவலர்களுக்கான 2-ம் கட்ட உடல்தகுதி தேர்வில் 338 பேர் தேர்வு செய்யப்பட்டனர் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்

வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடந்த 2-ம் நிலை காவலர்களுக்கான 2-ம் கட்ட உடல்தகுதி தேர்வில் 338 பேர் தேர்வு செய்யப்பட்டனர் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உடல்தகுதி தேர்வு

வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்ற வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 1,059 பேருக்கு கடந்த 6 முதல் 9-ந் தேதி வரை முதற்கட்ட உடல்தகுதி தேர்வு நடைபெற்றது.

இதில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு, உயரம், மார்பு அளவீடு, 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்டவற்றில் 794 பேர் தேர்வாகினர்.

இந்த நிலையில் அவர்களுக்கு 2-ம் கட்ட உடல்தகுதி தேர்வு இன்று வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. முதல்நாளில் பங்கேற்க 346 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதில் அனைவரும் கலந்து கொண்டனர். 2-ம் கட்ட உடல்தகுதி தேர்வுகளாக கயிறு ஏறுதல், நீளம் அல்லது உயரம் தாண்டுதல், 100 மீட்டர் அல்லது 400 மீட்டர் ஓட்டம் ஆகியவை நடந்தது.

உயரம் தாண்டுதலில் 3 பேர்

முதற்கட்டமாக அனைவரும் கயிறு ஏறினார்கள். இதில் 3 வாய்ப்புகள் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நீளம் அல்லது உயரம் தாண்டுதல் நடந்தது. இதில் உயரம் தாண்டுதலில் 3 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

அவர்கள் குறிப்பிட்ட இலக்கை தாண்டி தேர்வாகினர். மற்ற அனைவரும் நீளம் தாண்டுதலில் கலந்து கொண்டனர்.

இதையடுத்து இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 100 மீட்டர் அல்லது 400 மீட்டர் ஓட்டம் நடந்தது. 4 பேர் மட்டுமே 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்று இலக்கை அடைந்து தேர்வாகினர்.

மற்றவர்கள் 400 மீட்டர் ஓடினார்கள். 2-ம் கட்ட உடல்தகுதி தேர்வில் 338 பேர் தேர்வாகினர். 8 பேர் தோல்வியடைந்தனர்.

இதனை வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையிட்டனர்.

முதற்கட்ட உடல்தகுதி தேர்வில் தேர்வான மீதமுள்ள 448 பேருக்கும் நாளையும் (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாளும் (சனிக்கிழமை) 2-ம் கட்ட உடல்குதி தேர்வு நடைபெற உள்ளது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story