42 நாட்களில் 34 அடி குறைந்தது: குட்டைபோல் காட்சி அளிக்கும் மேட்டூர் அணை
மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 42 நாட்களில் 34 அடி குறைந்து விட்டதால் குட்டைபோல் காட்சி அளிக்கிறது.
மேட்டூர்,
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையாத நிலையிலும், காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் குறிப்பிட்ட தேதியான ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போது அணை நீர்மட்டம் 103 அடியாக இருந்தது.
34 அடி குறைந்தது
அன்று முதல் தற்போது வரை காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டு கொண்டே வருகிறது. அதாவது வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு நீர்வரத்தானது வினாடிக்கு 200 கனஅடிக்கு கீழ் குறைந்துள்ள நிலையில், அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து கொண்டே வருகிறது.
கடந்த மாதம் 12-ந்தேதி முதல் நேற்று வரை அதாவது 42 நாட்களில் அணையின் நீர்மட்டம் 34 அடி குறைந்துள்ளது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறித்த நேரத்துக்கு முன்னதாகவே தொடங்கி அதி தீவிரமடைந்தது.
குட்டை போல் காட்சி அளிக்கிறது
இதனால் கர்நாடகம், கேரளம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி அணைகளில் இருந்து உபரிநீர் நீண்ட நாட்களுக்கு திறந்து விடப்படும் சூழ்நிலை இருந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு இதற்கு நேர் மாறான சூழ்நிலை நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை இப்போதுதான் ஓரளவு பெய்ய தொடங்கி உள்ளது. அதுவும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்த மழையளவு எதிர்பார்த்த அளவு இல்லை.
கடந்த ஆண்டு இதே நாளில் மேட்டூர் அணையின் உச்சபட்ச நீர்மட்டமான 120 அடியை எட்டி அணை நிரம்பி கடல் போல் காட்சி அளித்தது. தற்போது அணைக்கு போதிய நீர்வரத்து இல்லாததால் இந்த ஆண்டு அணை வறண்டு குட்டை போல் காட்சியளிக்கிறது.
இதனால் கவலை அடைந்துள்ள விவசாயிகள் பருவமழையை எதிர்பார்த்து உள்ளனர். மேலும் காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட தமிழக டெல்டா பாசன விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கர்நாடகா தண்ணீர் திறப்பு
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ் சாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 987 கன அடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) வந்தடையும். பின்னர் அங்கிருந்து அன்று மாலையில் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு நாளை மறுநாள் (புதன்கிழமை) தண்ணீர் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. ஆனால் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தடைந்தால் அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வரும்.
அதாவது தண்ணீர் திறப்பை விட அணைக்கு நீர்வரத்து குறைவாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.