ஓடும் ரெயிலில் 34 கிலோ கஞ்சா பறிமுதல்
காட்பாடி-ஜோலார்பேட்டை இடையே ஓடும் ரெயிலில் போைதப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் 34 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கர்நாடகத்தை சேர்ந்த 2 வாலிபர்களை கைது செய்தனர்.
போதைப்பொருட்கள் கடத்தல்
காட்பாடி வழயாக பெங்களூரு, திருவனந்தபுரம் செல்லும் ரெயில்களில் போைத பொருட்கள் கடத்தலை தடுக்க தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டு அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். இதில் வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாகர்கோவில் ரெயில்வே போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜோசப் தலைமையில் அண்ணாதுரை, மாரிசெல்வன் உள்ளிட்ட ரெயில்வே போலீசார் நேற்று காலை ஆந்திர மாநிலம் சித்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு வரை செல்லும் ரெயில்களில் சோதனை மேற்கொண்டனர்.
காட்பாடியில் இறங்கிய அவர்கள் ஜார்கண்ட் மாநிலம் ஹட்டியாவிலிருந்து கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூர் செல்லும் ரெயிலில் ஏறினர். ரெயில் ஜோலார்பேட்டையை நோக்கி வந்து கொண்டிருந்தபோது அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
2 பேர் கைது
அப்போது ரெயிலின் முன் பதிவு செய்யப்பட்ட எஸ் 3 பெட்டியில் சோதனை செய்த போது கழிவறையின் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் ஓரமாக நின்ற 2 பேர் வைத்திருந்த பேக்குகளில் சோதனை செய்தனர்.
அதில் 3 பண்டல்களில் சுமார் 34 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் பெங்களூரு வித்யாரன்னியபுரா பகுதியைச் சேர்ந்த ராயப்பன் மகன் செந்து (வயது 22) மற்றும் பெங்களூரு மாண்டியா பகுதியை சேர்ந்த சித்தாராஜ் மகன் மனோஜ் (25) என்பது தெரிய வந்தது.
ரெயில் ஜோலார்பேட்டையை வந்தடைந்ததும் இருவரையும் 34 கிலோ கஞ்சாவுடன் மேல் நடவடிக்கைக்காக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் இருவரையும் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.