வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நூதன முறையில் 35 பவுன் நகை திருட்டு


வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நூதன முறையில் 35 பவுன் நகை திருட்டு
x

கலசபாக்கம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் துக்கம் விசாரிப்பது போல் காரில் வந்த மர்மபெண் 35 பவுன் நகைகளை திருடி சென்றார்.

திருவண்ணாமலை

கலசபாக்கம்,

கலசபாக்கம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் துக்கம் விசாரிப்பது போல் காரில் வந்த மர்மபெண் 35 பவுன் நகைகளை திருடி சென்றார்.

காரில் வந்த பெண்

கலசபாக்கம் அருகே காஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வசித்து வருபவர் புஷ்பராணி (வயது 75).

இவரது கணவர் கண்ணன், ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர். கண்ணன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். அவர்கள் சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் புஷ்பராணி தனியாக வசித்து வந்தார்.

இந்தநிலையில் இன்று பகல் 12 மணி அளவில் ஒரு பெண் காரில் புஷ்பராணியின் வீட்டுக்கு வந்தார்.

அந்த பெண் புஷ்பராணியிடம் உங்களின் கணவர் இறந்ததை ஏன் எனக்கு தெரியப்படுத்தவில்லை நான் அவருடன் பணிபுரிந்த ஆசிரியை என்று கூறி அறிமுகப்படுத்தி கொண்டார்.

மேலும் அவரது மனதை கவரும் வகையில் பேசி விட்டு வீட்டிற்கு கிளம்புவதாக கூறியுள்ளார்.

35 பவுன் நகை திருட்டு

அப்போது புஷ்பராணி அந்த பெண்ணுக்கு பீரோவில் இருந்த ஜாக்கெட் மற்றும் குங்குமம், மஞ்சளை எடுத்து கொடுத்துள்ளார்.

இதனை பெற்றுக் கொண்ட அவர் வெளியில் வந்தார். அவரை வழி அனுப்புவதற்காக புஷ்பராணியும் வெளியில் வந்தார்.

அதன்பிறகு அந்த பெண் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு உள்ளே சென்று திறந்து கிடந்த பீரோவில் இருந்த 35 பவுன் நகைகளை திருடிக் கொண்டு வெளியே வந்து காரில் தப்பி சென்று விட்டார்.

சிறிது நேரம் கழித்து புஷ்பராணி பீரோவை மூடுவதற்காக சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த துணிகள் கலைந்து கிடந்ததையும், பீரோவில் இருந்த 35 பவுன் நகைகள் காணாமல் போனதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்து சென்னையில் உள்ள மகன்களுக்கு போன் செய்து கூறினார்.

மேலும் அவர் கடலாடி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் மர்ம பெண்ணையும் தேடி வருகின்றனர்.

இது சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story